சமூக மொழிப் பள்ளிகளுக்கு 9.9 மில்லியன் டாலர் நிதியுதவி
சனிக்கிழமை, 19 நவம்பர் 2022
நியூ சவுத் வேல்ஸ் மாணவர்களை ஆதரிப்பதற்காகவும், மேலும் நியூ சவுத் வேல்சில் உள்ள பன்முகக் கலாச்சாரத்தின் வளமிகு கலவைக்கு தங்களின் பங்களிப்பைத் தொடர்வதற்காகவும், சமூக மொழிப் பள்ளிகள் 9.9 மில்லியன் டாலர் ஊக்க நிதியுதவியைப் பெறும்.
மாநிலம் முழுவதும் உள்ள சமூக மொழிப் பள்ளிகள் நமது வளர்ந்துவரும் பன்முகக் கலாச்சார சமூகத்தின் முக்கிய பகுதியாகும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதலமைச்சர் டொமினிக் பெரோட்டெட் (Dominic Perrottet) கூறினார்.
“நாட்டிலேயே கலாச்சார ரீதியாக அதிக அளவில் வேறுபட்ட மாநிலம் நியூ சவுத் வேல்ஸ் ஆகும், மேலும் நமது சமூகத்திற்குப் பங்களிக்கும் பல மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று திரு பெரோட்டட் (Mr Perrottet) கூறினார்
“33,000 -க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களின் பாரம்பரியத்துடன் இணைக்கவும், ஒரு மொழியைக் கற்பதன் மூலம் சமூகங்களை வலுப்படுத்தவும் உதவுவதற்கு எங்களிடம் 565 மொழிப் பள்ளிகள் உள்ளன.”
சமூகங்கள் தங்கள் பாரம்பரியத்துடன் இணைந்திருக்க அனுமதிப்பதற்கும், அந்த மொழியில் அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் சமூக மொழிகள் மிகவும் முக்கியமாகும் என்று கல்வி மற்றும் ஆரம்பக் கற்றலுக்கான அமைச்சர் சாரா மிட்செல் (Sarah Mitchell) கூறினார்.
” அவர்களது பாரம்பரிய மொழியின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவும் வகையில், சமூக மொழிப் பள்ளிகளை நாங்கள் குடும்பங்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியமானது,” என்று திருமதி மிட்செல் (Ms Mitchell) கூறினார்.
“நிதியுதவியானது பள்ளிகளை இயக்கவும், அர்ப்பணிப்புள்ள தன்னார்வ ஆசிரியர்களுக்குப் பணிசார்ந்த வளர்ச்சியினை (professional development) வழங்கவும் உதவும். மேலும் அதிகமான மக்களைச் சென்றடைய அனுமதிக்கும் வகையில் மின்னியல் மாற்றத்தை (digital transformation) பள்ளிகள் ஏற்படுத்துவதற்கு நாங்கள் அவற்றுக்கு உதவுவோம்.”
கடந்த ஆண்டு பள்ளிநேரம் அல்லாத கால நிகழ்ச்சித் திட்டத்தில், மாணவர்களுக்கு 63 வெவ்வேறு மொழிகளைக் கற்பித்த சமூக மொழி பள்ளிகளைச் சார்ந்த 3,000 -க்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்களுக்குப் பன்முகக் கலாச்சார அமைச்சர் மார்க் கோர் (Mark Coure) நன்றி தெரிவித்தார்.
“உலகெங்கிலும் உள்ள மொழிகள் இங்கே நியூ சவுத் வேல்ஸில் பாதுகாக்கப்பட்டு கொண்டாடப்படுவதை உறுதிசெய்ய, எங்களது விலைமதிப்பற்ற ஆசிரியர்கள் மற்றும் சமூக மொழி ஆதரவாளர்களின் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது,” என்று திரு கோர் (Mr Coure) கூறினார்.
“எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஆசிரியர்கள் புதிய தலைமுறையினருக்கு மொழியைப் பரிசாக வழங்குகிறார்கள், சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அதே சமயத்தில் அவர்களைக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்கிறார்கள்.”
ஏறக்குறைய 10 -க்கு 8 சமூக மொழிப் பள்ளிகள் தங்கள் வகுப்புகளை நியூ சவுத் வேல்ஸ் அரசு பொதுப் பள்ளியில் நடத்துகின்றன, அந்த இடவசதிகளைப் பயன்படுத்துவதற்கான செலவை கல்வித் துறை மானியமாக வழங்குகிறது.
பள்ளிகள் செயல்பாடுகளையும் மற்றும் அவர்களின் ஆசிரியர்களையும் ஆதரிக்கும் வகையில் குறிப்பிட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் சமூக அமைப்புகள் மற்றும் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
MEDIA: Clem Hall | Premier | 0499 818 662
Eliza Cabassi | Minister Mitchell | 0428 260 469
Scott Hodder | Minister Coure | 0455 094 282
https://websitedesigns.com.au/elankanew/wp-content/uploads/2022/11/9.9-million-funding-for-community-language-schools-TAMIL.pdf